பா.ஜ.கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் |  பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி மரணம்

பா.ஜ.கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம்

பா.ஜ.கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக்கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ். குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனை தமிழ் கலாசார முறைப்படி வழிபட்டார்.

காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயச் சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்று ஆலய வழிபாட்டுக்கு அழைத்துச்சென்றனர். அவரோடு இ.தொ. க. தலைவர் செந்தில் தொண்டமான் உடனிருந்தார்.

அத்துடன் இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

தலைவர் கு. அண்ணாமலை இன்று திங்கட்கிழமை காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.

இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து ஊடக மாநாடு இடம் பெற்றது.

பாடசாலை மாணவி தீயில் கருகி மரணம்

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் இத்துயரச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

மகாஜனா கல்லூரி மாணவியான பண்டத்தரிப்பை சேர்ந்த சுதர்சன் - சுதர்சிகா (வயது-17) என்ற மாணவியே இதன்போது உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலை வாங்கி சேமித்து வைக்கும் நோக்கில் வீட்டு சுவாமி அறையில் பெற்றோல் நிரப்பப்பட்ட கலன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை வழக்கம் போல் சுதர்சிகா வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

இதன்போது சுவாமி தட்டுக்கு கீழாக வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கலனில் கீழே விழுந்த தீக்குச்சி பட்டதும் தீப்பற்றி எரிந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


மூன்று உறவுகளைத் தேடிய தாய் ஏக்கத்தால் உயிர்விட்டார்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மரணமடைந்துள்ளார்.

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது-75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவரது மகன், தங்கராசா தயாபரன் (வயது 41), மருமகன், தம்பு தியாகராசா (வயது 56), பேரன், தியாகராசா மனோகரன் (வயது 31) ஆகிய மூவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளத்தில் விறகுவெட்ட சென்றபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத் தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தரப் போராடியிருந்தார்.

இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று முன் தினம் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் |  பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி மரணம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY